Wednesday, January 8, 2014

முதியோர் உதவித்தொகை திட்டம்

கும்பகோணத்தில் ஒரு நிகழ்ச்சி.

கல்லூரியில் பேச அழைக்கப்பட்டிருக்கிறார் பெருந்தலைவர். போலிஸ் தடுப்பையும் மீறி ஒரு மூதாட்டி வருகிறார். அவர் கையில் சாப்பாடு தூக்குகள் நிரம்பிய கூடை. அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சாப்பாடு கொண்டு வரும் வேலை செய்து வருகிறார் அந்த மூதாட்டி தலைவரைப் பார்த்து,

"அய்யா ... இந்த தள்ளாத வயதிலும் இப்படி கூடை தூக்கி பிழைக்க வேண்டி இருக்கிறதே ... எங்களுக்கெல்லாம் ஏதேனும் செய்யக் கூடாதா" என்று கேட்க,

"ஆகட்டும் பார்க்கலாம்" என்றார் பெருந்தலைவர்.

சொல்லி விட்டாரே ஒழிய காரில் பயணிக்கும் போது அந்த மூதாட்டியின் வார்த்தைகள்தான் கர்மவீரரின் மனதில் வந்து மோதின.எதாவது செய்தாக வேண்டுமே என்று யோசித்த அவர் உடன் இருந்த அதிகாரிகளிடம்,

"இது போன்ற ஆதரவற்ற முதியவர்களுக்கு மாதம் எவ்வளவு தேவைப்படும்" என்கிறார்.

"மாதம் இருபது ரூபாய் கொடுக்கலாம் அய்யா" இது அதிகாரிகளின் பதில்.

உடனடியாக உத்தரவு பறந்தது,மாநிலம் முழுவதும் இருக்கின்ற ஆதரவற்ற முதியவர்கள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.

தமிழகத்தில் "முதியோர் உதவித்தொகை திட்டம்" துவங்கப்பட்டது.